Friday, March 11, 2011

ஜப்பானின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளில் பயங்கர பூகம்பத்தின் தொடர்ச்சியாக சுனாமி தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது

ஜப்பானில் 140 இடங்களில் ஆழிப் பேரலை மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.10 மீற்றர் உயரத்துக்கு எழுந்த பேரலை நகருக்குள் நுழைந்து அது பயணித்த பாதையில் காணப்பட்ட கட்டடங்கள், வீடுகள், கார்கள் அனைத்தையும் அடித்துச் சென்றது.

இந்த அனர்த்தத்தால் இது வரை 300 பேர் பலியாகியுள்ள தாகவும் 106 பேர் காயங்களுக்கு ஆளாகி வைத்திய சாலைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசின் உத்தியோக பூர்வ தொலைக்காட்சி நேற்று மாலை அறிவித்தது.
 
இந்த அனர்த்தத்தினால் ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மியாகி, புகுசிமா கரையோர நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

மியாகி மாகாணத்தின் சென்டாய் நகரத்தில் அமைந்துள்ள ஒனாகாவா சர்வதேச அணுஉலை நிலையம் ஆழிப்பேரலைகளால் முற்றாக அடித்துச் செல்லப்பட்டு நாசமாகியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் தீ அனர்த்தமும் ஏற்பட்டது.சென்டாய் நகரத்தில் உள்ள விவசாய நிலங்களும் இந்த அனர்த்தத்தால் முற்றாக அழிவடைந்தன.
 
 
மியாகி கடற்பரப்பில் சுமார் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த கப்பலுக்கு என்ன நடந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.அத்துடன் சென்டாய் விமான நிலையம், சர்வதேச வர்த்தக கட்டடம் என்பனவும் சுனாமி அலைகளால் அள்ளுண்டு நிர் மூலமாகின.
 

மீட்புப் பணிகளுக்காகத் தலைநகர் ரோக்கியோவில் இருந்தும் ஏனைய மாகாணங்களில் இருந்தும் இராணுவ மற்றும் தனியார் ஹெலிகொப்டர்கள் அனர்த்தம் நிகழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.இடிபாடுகளில் சிக்கியுள்ள வர்களை மீட்பதற்காக இராணுவம், பொலிஸ், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் அவசரப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
 

அனர்த்தத்தில் சிக்கியுள்ளோ ருக்கு உதவ உடனடி உதவிகளை அனுப்பிவைப்பதற்குத் தயாராக உள்ளதாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் ஜப்பானுக்கு அறிவித்திருக்கின்றன.ஜப்பான் வடகிழக்குக் கரையோரம் இந்த அனர்த்ததத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. ரோக்கியோவின் வடபகுதியில் 40 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

8.9 ரிச்டர் அளவில் பதிவான நில நடுக்கத்தை அடுத்து இந்த ஆழிப்பேரலை இடம்பெற்றுள்ளது.
பேரலையால் தாக்கப்பட்டு மின்கம்பங்கள் மின்சார மார்க்கங்கள் மோசமாகத் தாக்கப்பட்டமையால் பல இடங்களில் தீ அபாயம் காணப்படுவதாகவும் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு இதனால் பெரும் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

ஜப்பானின் சர்வதேச விமான நிலையங்களில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.மேற்குக் கரையோரமான பக்காயாமாவில் இருந்து 20 ஆயிரம் மக்கள் சுனாமி எச்சரிக்கையால் வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலநடுக்கத்தால் நகரில் உள்ள கட்டடங்கள் மிகவும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1923 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கான்டோ நிலநடுக்கத்துக்குப் பின்னர் இப்போதே பெரியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.1923 ஆம் ஆண்டு 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.1995 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய கோபோ நிலநடுக்கம் 100 பில்லியன் டொலர் சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. வரலாற்றில் மோசமான இயற்கை அழிவு இது என்று பதிவாகியிருந்தது.
 
 
2004 ஆம் ஆண்டு இந்தியக் கரையோரங்களைத் தாக்கிய சுனாமி ஏற்படுத்திய சேதம் 10 பில்லியன் டொலர் என்று கணிப் பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 
தகவல்-  மாசுவன் இணையம்  
124
 

No comments:

Post a Comment