Monday, March 7, 2011

தாயும் மகனும் வெள்ளை வானில் கடத்தல்


யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கு பகுதியில்
இன்று இடம் பெற்றதாகக் கூறப்படும்
வெள்ளை வான் கடத்தல் சம்பவத்தில்
 தாயொருவரும், மகனும் கடத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மீசாலைப் பகுதியில் இன்று பெரும்
பரபரப்பு நிலவியது.

 சம்பவத்தையடுத்து செயலில் இறங்கிய
 காவற்றுறையினரால் சம்பந்தப்பட்ட
வெள்ளை வான் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும்
 38 வயதுடைய பெண் ஒருவர்
 கணவனைப் பிரிந்து, மீசாலை
கிழக்கிலுள்ள உறவினர்களுடன்
 வசித்து வந்துள்ளார்.

 இன்று அவர்களது வீட்டுக்கு வேறு
ஆட்களுடன் வானொன்றில் வந்த
அப் பெண்ணின் கணவர் வாய்த்
தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்
வேளையில் வீட்டிலிருந்தவர்கள்
கூக்குரலிடவே வாகனத்தில் வந்தவர்கள்
மகனையும் தாயையும் இழுத்துச்சென்று
வானில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து
தப்பியதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
அயலவர்களின் தகவலையடுத்து
காவற்றுறையினரும், படையினருமாக
 தேடுதல் நடிவடிக்கையில் இறங்கினர்.

சாவகச்சேரி புறநகர்ப்பகுதியில்
 சம்பந்தப்பட்ட வான் மடக்கிப்
பிடிக்கப்பட்டு, வானினுள் இருந்த
 தந்தையும், வாகனச் சாரதியும்
வேறொரு பெண்ணும் சாவகச்சேரி
காவற்றுறை நிலையத்துக்கு அழைத்துச்
 செல்லப்பட்டுள்ளனர் என்றும் வாகனத்துக்குள்
இருந்து சம்பந்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ள
 போதும், கடத்தப்பட்ட பெண் காணாமற்
 போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எனினும் சுயாதீன செய்தி வட்டாரங்கள்
 எதுவும் இதனை உறுதிசெய்யவில்லை.

சம்பவம் தொடர்பாக காவற்றுறையினர்
 தகவல் தருகையில், பரபரப்புக்குரிய
சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.
 இது வெள்ளைவான் கடத்தல் இல்லை.
ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை
என்று தெரிவித்துள்ளனர்.