Tuesday, February 8, 2011

குடாநாட்டில் அத்தியவசிய பொருட்கள் விலையுயர்வு

 குடாநாட்டில் அத்தியவசிய பொருட்கள் விலையுயர்வு தொடர்கிறது : தட்டுப்பாடு இல்லை என்கிறது
வணிகர் கழகம்



குடாநாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலை இன்று மாலை வரை கூட உயர்ந்தே காணப்பட்டது. திடீரென நேற்று மாலை முதல் அதிகரித்த விலையிலேயே பொருட்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில்குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு எதுவுமில்லை என்று சாரப்பட, பொது மக்களுக்கு அத்தியவசிய பொருட்களின் இருப்பு மற்றும் விலைகளை தெளிவு படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இன்று மாலை 4 மணிக்கு யாழ். வணிகர் கழக மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.


இந்தச் சந்திப்பின் போது வெள்ளம் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களில் அத்தியவசிய பொருட்களிற்கு தட்டப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் குடாநாட்டில் குறிப்பாக அரிசி. சீனி, உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை என யாழ் வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். 
 
 
தற்போது தரத்திற்கேற்ற வகையில் ஒரு கிலோ அரிசி ரூ.65 - ரூ.80 வரையிலும், ஒரு கிலோ சீனி ரூ.100 - ரூ.105 வரையிலும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.45 - ரூ.60 வரையிலும் யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்ய முடியும். வர்த்தக வழிப் பாதைகள் கூட பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை அரிசிக்கு தட்டுப்பாடு தற்போதைக்கில்லை என குடாநாட்டு வியாபாரிகள் பலர் தெரிவித்துள்ள போதிலும் விலையேற்றம் குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.
 
எமது செய்தியாளர்களின் தகவல்களின் படி குடாநாட்டின் பல பகுதிகளிலும், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தாராளமாகக் கிடைக்கின்ற போதிலும், ஒவ்வொரு பொருட்களும் ஆகக்குறைந்தது கிலோவுக்கு பத்து முதல் பதினைந்து ரூபாய் அதிரித்த விலையிலேயே விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். நகரை அண்டிய பிரபல கடைகள் பலவற்றில் நேரத்துக்கு நேரம் விலைகள் மாறிக்கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.