Thursday, June 9, 2011

யாழ்ப்பாணத்தில் வேலையில்லை ......................யாழ்ப்பாணத்தில் வேலையில்லை

யாழ்ப்பாணம் அல்லது வட மாகணத்தில் நிலவும் வேலையின்மை வீதம் பற்றி இது வரை யாரும் அறிந்ததில்லை. தற்போது யாழ்ப்பாணத்தில், 10 தொடக்கம் 20 சதவீதத்திற்கும் இடைப்பட்டதான அளவு வேலையின்மை வீதம்  காணப்படுவதாக இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு வரும் பொருளியலாளரான கலாநிதி. முத்துகிருஷ்னன். சர்வானந்தன் இன்று ஒன்லைன் உதயனுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நான்கு புள்ளி ஒன்பது சதவீத வேலையின்மை வீதம் கடந்த ஆண்டில் காணப்பட்டதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதில் வடக்கு மாகணத்தின் நிலமை உள்வாங்கப்படவில்லை. அத்துடன் தரவுகளின் பற்றாக்குறை காரணமாக வடமாகணத்தின் வேலையின்மை வீதம் பற்றி யாரும் கணக்கிடவில்லை.
குறிப்பாக கடந்த மூன்று தசாப்த காலம் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக பாரிய அளவிலான மக்களின் இடப்பெயர்வு, பாதுகாப்பு கட்டுப்பாடுகள், விவசாய நிலங்களில் புதையுண்டு காணப்படும் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் வர்த்தக, உற்பத்தி நடவடிக்கைகள் மூடப்பட்டமை என்பவற்றின் காரணமாக நூறாயிரக் கணக்கான வேலை வாய்ப்புக்களும், வாழ்வாதாரங்களும் வட – கிழக்கில்  அழிந்து போயின.  
இதனால் அதிக எண்ணிக்கையிலான குடும்பத்தினர் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர். தவிர, அதிக எண்ணிக்கையிலான குற்றச் செயல்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் மத்தியில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்வதற்கான தீவிரமான விருப்பு என்பனவற்றின் காரணமாக யாழ்ப்பாணத்தில் அல்லது வட மாகாணத்தில் அதிக அளவிலான வேலை வாய்ப்பின்மை மற்றும் வேலைப் பற்றாக்குறை என்பன காணப்படுகின்றன.
இருப்பினும்;, திறனற்ற, ஓரளவு திறனுடைய மற்றும் திறனுடைய தொழிலாளர்களுக்கு கொழும்பில் கிடைக்கக் கூடிய அதே அளவு நாட் கூலி யாழ்ப்பாணத்திலும் கிடைக்கின்றது. அத்துடன் விதை நடல் மற்றும் அறுவடைக் காலத்தின் போது தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையும் நிலவுகின்றது.
மேலும், வேலையற்ற இளைஞர்கள் (பட்டதாரிகள் உள்ளடங்கலாக) கிராமங்களிலும், நகரங்களிலும் அலைந்து திரிந்து பொழுது போக்குவதனையும் காணக் கூடியதாக உள்ளது. இவற்றுக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தில் தொழிலாளர் சந்தை என்பது புரியாத புதிராகவே உள்ளது எனவும் மு.சர்வானந்தா தெரிவித்தார்.,,,

தெல்லிப்பழை தேடுதலில் 19 பேர் கைது: குற்றச் செயலில் ஈடுபட்டோர் என்கிறது பொலிஸ்தரப்பு

அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வலி வடக்கு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது 19 பேர் கைது செய்யப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.


களவு, கொள்ளை போன்ற குற்றச்செயல் தொடர்பாகவே இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 மூவர் ஏற்கெனவே நீதிமன்றங்களினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்களாவர் எனவும் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.


மாவிட்டபுரம், கொள்ளன்கலட்டி, செல்வாபுரம், வித்தகபுரம, பன்னாலை, மாவைகலட்டி ஆகிய பகுதிகளில் இத்தேடுதல்கள் இடம்பெற்றன. கைது செய்யப்பட்டவர்கள் இப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் வீரசிங்க, பொலிஸ் பரிசோதகர் வடுகொட, எஸ்.திசாநாயக்க, எஸ்.ஐ. சகான் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது