Monday, February 21, 2011

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகள் இன்று

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் நடைபெறும்.



வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாளின் உடலுக்கு நேற்றும் பெரும் எண்ணிக் கையானோர் அஞ்சலி செலுத்தினர். கூட்டமைப்பு எம்.பிக்களான ஈ.சரவணபவன், எஸ். சிறிதரன், முன்னாள் எம்.பிக்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் நேற்றுமுன்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்திலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள பெரும்பாலும் இலங்கை வரலாம் என இறுதிக்கிரியை ஏற்பாடுகளைக் கவனிக்கும் முன்னாள் எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுத் தெரிவித்தார்.
 
 
இன்று நடைபெறும் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளவென இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடு திரும்புகின்றனர்.வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடல் இன்று காலை 10 மணிக்கு வல்வெட்டித்துறை ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது புதல்வியின் வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். மாலை 2.30 மணியளவில் உடல் வல்வெட்டித்துறை இந்து மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். மாலை 4 மணியளவில் உடல் தகனம் செய்யப்படும்.


பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை தம்பதியினருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தவிர, மனோகரன் என்ற மற்றொரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு மகள் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரிலும், மற்றொரு மகள் சென்னையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகன் மனோகரன், டென்மார்க் நாட்டில் குடும்பத்தினருடன் உள்ளார்
 
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்
124
 

மீண்டும் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச்சூடு

கடந்த ஓரிரு வாரமாகக் குறைந்து போயிருந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவங்கள் இன்று மீண்டும் குடா நாட்டில்
தலை தூக்கியுள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடாநாட்டுக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பி முழுமையாக ஒரு நாள் கூடக் கழியாத நிலையில் 'இனந்தெரியாத நபர்கள்' மீண்டும் யாழ். மானிப்பாய்ப் பகுதியில் தமது கைவரிசையைக் காட்டி இருக்கின்றனர்.

ஜனாதிபதி வந்து திரும்பும் வரை அமைதி காத்திருந்து விட்டு போனதும் தமது கைங்கரியத்தைத் தொடங்கியது போல ஆயுததாரிகளின் வேட்டுக்கு இலக்காகி இருக்கிறார் ஒரு அந்தணப் பெண்மணி.

மானிப்பாய்ப் பகுதியில் உள்ள அதிகாரி செல்லமுத்து சந்திக்கு அண்மையில் அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கூழாவடி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த திருமதி பாலசுந்தரம் நிமோசா என்ற 33 வயதுடைய அந்தணப் பெண்மணியே காலில் காயமடைந்திருக்கிறார். காயமடைந்தவர்

  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேலதிக படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன